Pages

Monday, July 30, 2012

கைலாசநாதர் - காஞ்சிபுரம்.

கைலாசநாதர் ஆலயத்தைக் காணும்போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருசேர வரவேற்கும்! ஆலயத்தின் ஒவ்வொரு சிற்பமும் ஆச்சரியம்; சிற்பங்களின் சிதிலநிலை அதிர்ச்சி. தற்போது தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிற இந்தக் கோயிலை 7 - 8 ஆம் நூற்றாண்டில் ராஜசிம்மப் பல்லவன் கட்டினான் என்று சரித்திரம் சொல்கிறது. 

 கைலாசநாதர் சன்னிதியில் பாதாளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஒருவர் மட்டுமே செல்லும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. நாம் தவழ்ந்துதான் வெளியேறமுடியும். அதற்குள் நுழைந்து வந்தால் நமது பாவங்கள் தீரும்; மறுபிறப்பு இல்லை!

மூலவர் சன்னதி தவிர அனைத்து உள், வெளிச் சுற்றுகள் திறந்தே இருக்கின்றன. பல்லவர் சிற்பக் கலையின் உச்சம் என்று பாராட்டப்படும் வண்ணம் கோயிலைச் சிறப்பான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. தொல்பொருள்துறை தன் பங்கிற்கு வெளியே சிறப்பாகப் புல்வெளி அமைத்துப் பாதுகாக்கிறார்கள். 

மாமல்லபுரத்தின் சிற்பக் கோயில்களை ஒத்திருக்கிறது இந்தக் கோயிலின் அமைப்பு. கோயிலின் சுற்றுச்சுவர்களின் கருகற்களால் ஆன சிற்பங்கள்; கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்கள்.  இயன்றவரை ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளையும் படம் எடுத்திருக்கிறேன். நிதானமாகப் பார்க்கவும். ஒரே மாதிரித் தோற்றம் கொண்டாலும் ஒவ்வொரு புகைப்படமும் வெவ்வேறு சிற்பங்களை உள்ளடக்கியவை. 

சிற்பங்களில் சரிபாதி சிதிலமடைந்துவிட்டன. ஆலயம் தற்சமயம் தொல்லியல்துறை வசம் இருப்பதால் அக்கறையோடு பராமரிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு நாள் முழுதும்  நின்று நிதானமாகப் பார்த்தாலும் இன்னும் பார்க்கத் தூண்டும் கலைவடிவம் கைலாசநாதர் ஆலயம்!